Showing posts with label Tamilan Awards. Show all posts
Showing posts with label Tamilan Awards. Show all posts

அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!


மூளைச் சாவு ஏற்பட்ட கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்குப் பொருத்தப்பட்டு அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அந்த ஏழு பேரின் குடும்பமும், இந்தக் கோவை மாணவிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி நிற்கின்றனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கே.மணியன். மதிமுக நகர அமைப்பாளராக இருக்கிறார். சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். இவருக்கு சரண்யா என்ற 21 வயது மகள் இருந்தார். கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில், பிஇ எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து முடித்துள்ளார். படிப்பை முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார்.
இந்த நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகள், உறவினர்களுடன் கார் மூலம் சேலம் சென்றுள்ளார். கருத்தரங்கை முடித்துக் கொண்டு திரும்புகையில், சித்தோடு அருகே கார் மீ்து லாரி மோதியது. இதில் சரண்யாவுடன் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சரண்யாவும், அவரது தோழி பானுப்பிரியாவும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சரண்யாவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளைச்சாவை சந்தித்தார்.
இதையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மணியன் முன்வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் இறங்கினர். டீன் டாக்டர் குமரன் நேரடி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவ குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் சென்று, சரண்யாவின் ஈரல் மற்றும் இருதய வால்வு உறுப்புகளை தானமாக பெற்று, உடனடியாக விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர். ஏற்கனவே தயாராக இருந்த ஒரு நோயாளிக்கு ஈரல் பகுதியை பொருத்தினார்கள். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு இருதய வால்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பெற்றுச்சென்றனர். மாணவியின் கண்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள 7 பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர். தனது மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த தந்தை மணியன் கூறுகையில்,
என்னுடைய மகள் சிறுவயது முதலே படிப்பில் சுட்டி. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தாள். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தாள். ரத்ததானமும் செய்வாள்.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த என்னுடைய மகளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறியது, பேரிடியாக இருந்தது. பாசமாக வளர்த்த மகள் மரணம் அடைந்தது பெரும் வேதனையை அளித்தாலும், அவளுடைய உடல் உறுப்புகளை பலருக்கு தானமாக அளிக்க முன்வந்தேன்.
ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும் என்று நம்புகிறேன்.
இந்த வேதனையான நிலையிலும், மற்றவர்களுக்கு நான் கூறிக்கொள்வது, உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்து விடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள் என்று கூறிக்கொள்கிறேன் என்றார் அவர்.
இதில் வேதனை என்னவென்றால் சரண்யாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சாலினா. பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். இருவரும் எல்.கேஜி முதல் என்ஜீனியரிங் வரை ஒன்றாகப் படித்து வந்தனர். படிப்பிலும் இருவரும் சுட்டியாக இருந்துள்ளனர். இருவரும் படிப்பை தலா 93 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளனர். இருவருக்கும் ஒன்றாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. பணியில் சேர காத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரணத்திலும் கூட இருவரும் பரிதாபமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இஸ்ரேலை சேர்ந்த போரீஸ் ஜெல்பாண்டை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன், இஸ்ரேலின் போரீஸ் ஜெல்பாண்டு இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் பெற்று வெற்றியாளரை முடிவு செய்ய முடியாமல், போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதல் சுற்று டை பிரேக்கரில் முடிய, 2வது போட்டியில் காய்களை விரைவாக நகர்த்திய ஆனந்த்தின் தாக்குதலில் ஜெல்பாண்டு திணறினார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், 1 வெற்றி, 3 டிரா மூலம் 2.5 புள்ளிகளை பெற்றார். ஆனால் ஜெல்பாண்டு சில தவறான காய் நகர்த்தல் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சாதனை தமிழர்கள்

டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
பல ஆண்டுகளுக்கு முன்பு அயல் நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியாவை, பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த சாதனையில் முக்கியப் பங்கு வகித்த 'பசுமைப் புரட்சியின் தந்தை'
திருமதி.எம்.ரேவதி
சுனாமியால் நாகைப் பகுதியிலுள்ள விவசாயத்திற்கு பயனற்றுப்போன 1,200 ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாய முறையில் பழைய நிலைக்கு விளைநிலங்களாக மாற்றியவர். இவரது இயற்கை தொழில்நுட்பத்தைக் கேள்விப்பட்டு இவரை அழைத்த பில் கிளிண்டன்,கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தோனேஷியாவில் 7 லட்சம் ஏக்கர் நிலங்களையும் சீர் செய்து கொடுத்தவர்


திரு.த.ஜெயகாந்தன்
உலகின் சிறந்த இலக்கியத்திற்கு நிகராக நவீன தமிழ் இலக்கியத்தைத் தனது படைப்புகளின் மூலம் சிகரங்களுக்கு எடுத்துச் சென்ற சிறந்த இலக்கியவாதி. இளம் தலைமுறையினர் படைப்பெழுச்சி கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்த முன்னோடி
திரு.சு.வெங்கடேசன்
அடித்தள தமிழ் மக்களின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை ஓர் வரலாற்று வரைவியல் புதினமாக உருவாக்கி, தனது முதல் படைப்பிற்கே சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளி. ஜெயகாந்தனுக்கு அடுத்தபடி மிக இளம் வயதில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றவர்


திரு.வேணு ஸ்ரீநிவாசன்
இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி பத்து நிறுவனங்களில் ஒன்றாகத் தனது நிறுவனத்தை வளர்த்தெடுத்ததோடு மட்டுமன்றி 720 கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட வழி செய்தவர்
திரு.ஏ. முருகானந்தம்
ஓர் இரும்புப் பட்டறையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கி, தனது இடைவிடாத ஆராய்ச்சியின் மூலம் சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்துக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை இளம் பெண்கள் சுகாதாரத்துடன் வாழ வகை செய்தவர்


திரு.ஏ. ஆர். ரஹ்மான்
நவீனத்துவம், தொழில்நுட்பம் கற்பனை, தரம் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இசையின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த தமிழர். திரை இசைக்குப் புதிய பரிணாமம் கொடுத்த இளைஞர்
சகோதரி சந்திரா
ஆண்களுக்கு மட்டும் என்றிருந்த, தப்பாட்டம் என்ற தமிழ்ப் பாரம்பரிய நடனக் கலையை, பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட கிராமப்புறப் பெண் குழந்தைகளுக்குக் கற்பித்து 'சக்தி கலைக் குழு'வை உருவாக்கியவர். பெண் கல்வி, பெண் உரிமை தொடர்பான கருத்துக்களை இந்தியாவில் பல மாநிலங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் பரப்பி வருகிறது இக்குழு


திரு. விஷ்வநாதன் ஆனந்த்
அறிவுக் கூர்மைக்கும், ஆற்றலுக்கும் சவால் விடும் விளையாட்டான சதுரங்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக உலக அளவில் சாம்பியனாகத் திகழும் தமிழர். ஆறு முறை வெளியிடப்பட்டுள்ள உலகத் தர வரிசைப் பட்டியலில் ஐந்து முறை இவர் முதலிடம் வகித்தவர்
செல்வி. காயத்ரி கோவிந்தராஜ்
கடினமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டபோதும் தனது திறனாலும் முயற்சியாலும் 2008ம் ஆண்டு இளைஞர்களுக்கானகாமன்வெல்த் போட்டிகளில் தொடர் ஓட்டத்திலும், 2009ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ.தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்